உங்களை அன்புடன் வரவேற்கிறோம் இன்னும் சில நாட்களில் இவ் இணையதளம் பல அம்சங்களுடன் உலா வரும்

Saturday, February 7, 2009

கோத்தபாய, பொன்சேகாவுக்கு எதிராக தமிழ் இன அழிப்பு குற்றச்சாட்டு; அமெரிக்க நீதிமன்றில் புறூஸ் பெயின் வழக்கு தாக்கல்



இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அந்நாட்டின் இராணுவத் தளபதி லெப்.கேணல் சரத்பொன்சேகா ஆகிய இருவர் மீதும், அமெரிக்க நீதிமன்றத்தில் இன அழிப்புக் குற்றம் சுமத்தப்பட்டு, அமெரிக்காவின் முன்னாள் பிரதி உதவி சட்டமா அதிபர் புறூஸ் பெயின் அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் சட்டத்துக்குப் புறம்பான 3,750 கொலைகளைச் செய்தும், 10,000 பேரை காய முறச்செய்தும், 13 லட்சம் மக்களை இடம்பெயர வைத்து அவலமுறச்செய்தும்,
குற்றமிழைத்துள்ளார்கள் என்பவை உட்பட பன்னிரெண்டு குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க சட்டமா அதிபரிடமும் நீதி அமைச்சிடமும் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்டன.
அமெரிக்காவின் இன அழிப்புக்குப் பொறுப்புக் கூறும் சட்டத்தின் (G.A.A) கீழ் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களையும் அமெரிக்காவின் முன்னாள் பிரதி உதவி சட்டமா அதிபர் புறூஸ் பெயின் தாக்கல் செய்தார்.
தமக்கு கீழ் பணியாற்றும் பாதுகாப்புப் படையினர் செய்த இன அழிப்புக் கொலைகளை, பாதுகாப்புச் செயலாளரும், இராணுவத் தளபதியுமே உத்தரவிட்டுச் செய்வித்தார்கள் என்பதால், அவர்களே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று வழக்குத்தொடருநரான புறூஸ் பெயின் தமது மனுவில் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவரங்களை புறூஸ் பெயின் அசோசியேட்ஸ் நிறுவனம் நேற்று வாஷிங்ரனில் வெளியிட்டது.
இலங்கையின் பன்னிரண்டு மாவட்டங்களில் 2005 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் (சம்பந்தப்பட்ட இருவரும் தமது அரசாங்கப் பதவிகளை பொறுப்பேற்ற நாள் தொடக்கம்) வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நாள் வரை இடம்பெற்ற சட்டத்துக்கு முரணான 3,750 கொலைகளுக்கும் 10,000 பேர் உடல் ரீதியான உபாதைகளுக்கு ஆளாவதற்கும் 13 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து அவலப்படுவதற்கும் இவர்கள் இருவருமே காரணமானவர்கள், பொறுப்பாளிகள் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த எண்ணிக்கைகள், முன்னாள் யுகோஸ்லாவிய ஜனாதிபதி ஏற்படுத்திய இடப்பெயர்வுகளினால் கொசோவாவில் உண்டான இன அழிப்பு எண்ணிக்கையை விட மிகவும் அதிகமானதாகும் எனவும் மனுவில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தினால் 2007 ஆம் ஆண்டு அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட இன அழிப்பு பொறுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்படும் முதலாவது வழக்கு இதுவாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜை என்பதாலும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா "கிறீன் காட்" பெற்றவர் என்பதாலும் அவர்கள் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடர முடியும் என்றும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இன அழிப்புக்கு எதிரான தமிழர் இயக்கம், தமிழர் சட்ட பாதுகாப்பு நிதியம் ஆகியவற்றின் சார்பிலேயே புறூஸ் பெயின் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

0 மக்கள் கருத்துக்கள்:

About This Blog

About This Blog

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP