உங்களை அன்புடன் வரவேற்கிறோம் இன்னும் சில நாட்களில் இவ் இணையதளம் பல அம்சங்களுடன் உலா வரும்

Wednesday, February 11, 2009

இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.க இரண்டு தடவை ஆட்சியிழந்துள்ளது - கருணாநிதி


இலங்கை தமிழர்களுக்காக திராவிட முன்னேற்ற கழகம் தனது ஆட்சியை இரண்டு முறை இழந்திருப்பதாக தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்த போது இலங்கை தமிழர்களுக்காக எதனையும் செய்துவிட வில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் முகமாகவே முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 1976 ஆம் மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக தனது ஆட்சியை திராவிட முன்னேற்ற கழகம் இழந்திருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை இலங்கை தமிழர் பிரச்னைகளுக்காக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் தாக்கப்படுவதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

Saturday, February 7, 2009

அனுராதபுரத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது தாக்குதல்



அனுராதபுரத்தில் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான பணிப்பாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்துப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

வவுனியாவில் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் உட்பட 4 பேர் வவுனியா பகுதியில் சுட்டுக்கொலை



வவுனியாவில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
செட்டிகுளம் கிறிஸ்தவகுளம் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்விருவரும் மோட்டார் சைக்கிளொன்றில் சென்று கொண்டிருந்த போது இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இருவரும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இவர்களது சடலங்கள் பின்னர் அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற படையினரும் பொலிஸாரும் அங்கு சுற்றிவளைப்பு மற்றும் தேடுதலை நடத்தியுள்ளனர்.
இதேநேரம், வவுனியா செக்கடிப்பிலவு பகுதியில் வியாழக்கிழமை மாலை இளைஞன் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இவரது சடலம் அந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. கொல்லப்பட்டவர் நிசாந்தன் (18 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது சடலம் பின்னர் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை வவுனியா பட்டகாடு பகுதியில் இளைஞனொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வீதியோரத்தில் குப்பை மேட்டுக்கு அருகில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட இவரது சடலம் பின்னர் வவுனியா ஆஸ்பத்திரியில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது.

Read more...

ஈழத்தமிழர்கள் படும் அவலங்களால் சீர்காழி காங்கிரஸ் வட்டாரத் தலைவர் தீக்குளிப்பு: அவர்களுக்கு என் உயிரை காணிக்கையாக்குகிறேன்; மருத்துவமனையில் நீதவானிடம்




நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீர்காழி வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவிச்சந்திரன் (45 வயது) இன்று சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டபடி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
இதுபற்றி தெரியவருவதாவது:-
சீர்காழி மணல்மேடு பகுதியில் உள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் வேலை பார்க்கும் ரவிச்சந்திரன் அதிகாலை 2.30 மணிக்கு திடீரென தன் வீட்டிற்கு வெளியே வந்து, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் இட்டபடியே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
ரவிச்சந்திரனின் உரத்த குரலை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனாலும் அதற்குள் ரவிச்சந்திரனின் உடல் 65 சதவீதம் தீக்காயங்களுடன் கருகி விட்டது. தீக்குளித்த ரவிச்சந்திரனின் உயிரைக் காப்பாற்ற மயிலாடுதுறை அரசு மருத்துவமனிக்கு கொண்டு சென்றனர். அப்போது, ஈழத்தில் தினந்தோறும் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழர்களுக்காகவும் அவர்களுக்கு எதுவும் உதவாத தன் கட்சியை கண்டித்தும் இந்த தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சொல்லியிருக்கிறார் ரவிச்சந்திரன். ரவிச்சந்திரனின் தாயார் சாரதாவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான். அவர் மகளிர் காங்கிரஸ் பிரிவு உறுப்பினர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஒருவர் தீக்குளித்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
ரவிச்சந்திரன் வாக்குமூலம்
தீக்குளித்த ரவிச்சந்திரன் உயிரைக் காப்பாற்ற மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரவிச்சந்திரன் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். ரவிச்சந்திரன் உயிர் பிழைப்பார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கவில்லை. உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறை மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அந்த வாக்குமூலத்தில் நேற்று இரவு டி.வி.பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஈழத்தமிழர்களின் அவலங்களை பார்த்து நெஞ்சு பதைத்தேன். இத்தனை அவலத்திற்கு உள்ளாகியிருக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவ என் கட்சியினர் முன்வரவில்லையே என எனக்கு ஆதங்கமாக இருந்தது.
இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அங்கே அப்பாவித்தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இந்தியா நினைத்தால் இலங்கை தமிழர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் அதற்கான முயற்சியில் இறங்காதது எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. ஈழத்தமிழர்களுக்காக என் உயிரை காணிக்கையாக்குகிறேன்’’ என்று தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
ரவிச்சந்திரன் வீட்டில் தீக்குளிப்பதற்கு முன்பு தினசரி செய்தித்தாள் ஒன்றில் ஈழத்தமிழர்கள் துயரம் தன்னை மிகவும் பாதித்ததாக எழுதி வைத்துள்ளார். கூடவே "தமிழீழம் வாழ்க" என்றும் "ராஜபக்ச ஒழிக" என்றும் முழக்கங்களையும் எழுதி வைத்துள்ளார்.

Read more...

கோத்தபாய, பொன்சேகாவுக்கு எதிராக தமிழ் இன அழிப்பு குற்றச்சாட்டு; அமெரிக்க நீதிமன்றில் புறூஸ் பெயின் வழக்கு தாக்கல்



இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, அந்நாட்டின் இராணுவத் தளபதி லெப்.கேணல் சரத்பொன்சேகா ஆகிய இருவர் மீதும், அமெரிக்க நீதிமன்றத்தில் இன அழிப்புக் குற்றம் சுமத்தப்பட்டு, அமெரிக்காவின் முன்னாள் பிரதி உதவி சட்டமா அதிபர் புறூஸ் பெயின் அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் சட்டத்துக்குப் புறம்பான 3,750 கொலைகளைச் செய்தும், 10,000 பேரை காய முறச்செய்தும், 13 லட்சம் மக்களை இடம்பெயர வைத்து அவலமுறச்செய்தும்,
குற்றமிழைத்துள்ளார்கள் என்பவை உட்பட பன்னிரெண்டு குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க சட்டமா அதிபரிடமும் நீதி அமைச்சிடமும் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்டன.
அமெரிக்காவின் இன அழிப்புக்குப் பொறுப்புக் கூறும் சட்டத்தின் (G.A.A) கீழ் இருவர் மீதான குற்றச்சாட்டுக்களையும் அமெரிக்காவின் முன்னாள் பிரதி உதவி சட்டமா அதிபர் புறூஸ் பெயின் தாக்கல் செய்தார்.
தமக்கு கீழ் பணியாற்றும் பாதுகாப்புப் படையினர் செய்த இன அழிப்புக் கொலைகளை, பாதுகாப்புச் செயலாளரும், இராணுவத் தளபதியுமே உத்தரவிட்டுச் செய்வித்தார்கள் என்பதால், அவர்களே அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று வழக்குத்தொடருநரான புறூஸ் பெயின் தமது மனுவில் குற்றப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவரங்களை புறூஸ் பெயின் அசோசியேட்ஸ் நிறுவனம் நேற்று வாஷிங்ரனில் வெளியிட்டது.
இலங்கையின் பன்னிரண்டு மாவட்டங்களில் 2005 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் (சம்பந்தப்பட்ட இருவரும் தமது அரசாங்கப் பதவிகளை பொறுப்பேற்ற நாள் தொடக்கம்) வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நாள் வரை இடம்பெற்ற சட்டத்துக்கு முரணான 3,750 கொலைகளுக்கும் 10,000 பேர் உடல் ரீதியான உபாதைகளுக்கு ஆளாவதற்கும் 13 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து அவலப்படுவதற்கும் இவர்கள் இருவருமே காரணமானவர்கள், பொறுப்பாளிகள் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த எண்ணிக்கைகள், முன்னாள் யுகோஸ்லாவிய ஜனாதிபதி ஏற்படுத்திய இடப்பெயர்வுகளினால் கொசோவாவில் உண்டான இன அழிப்பு எண்ணிக்கையை விட மிகவும் அதிகமானதாகும் எனவும் மனுவில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தினால் 2007 ஆம் ஆண்டு அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட இன அழிப்பு பொறுப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்படும் முதலாவது வழக்கு இதுவாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜை என்பதாலும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா "கிறீன் காட்" பெற்றவர் என்பதாலும் அவர்கள் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடர முடியும் என்றும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இன அழிப்புக்கு எதிரான தமிழர் இயக்கம், தமிழர் சட்ட பாதுகாப்பு நிதியம் ஆகியவற்றின் சார்பிலேயே புறூஸ் பெயின் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.

Read more...

Friday, February 6, 2009

டென்மார்க் நாடாளுமன்றம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு பேரணி: 4 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்பு

ஈழத் தமிழர்களின் சுதந்திரம் ஆங்கிலேயரால் சிங்கள அரசிடம் தாரைவார்த்து கொடுக்கப்பட்ட கறுப்பு நாளான பெப்ரவரி 4 இல் டென்மார்க்கின் தலைநகரமான கொப்பன்கேகனில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.

இந்த வகையில் கடந்த புதன்கிழமை (04.02.09) முற்பகல் 11:30 நிமிடமளவில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொப்பன்கேகன் நகர சபைப் பகுதியில் ஒன்றுகூடி முழக்கங்களை எழுப்பியபடி பெரும் பேரணியாக நாடாளுமன்றத்தை சென்றடைந்தனர்.

இதில் முன்னாள் சமூக ஜனநாயக கட்சியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மோன்ஸ் லுக்கரொப்ற் அவர்களும், மற்றும் சமூக மக்கள் கட்சியின் வெளிவிவகார அரசியல் நிறைவேற்று அதிகாரி சிறீன் கேத ஆகியோரும் கலந்து கொண்டதுடன் உரையாற்றியும் உள்ளனர்.





தேசியம், சுயநிர்ணயம், சுயாட்சி போன்ற பல கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் எமது பிரச்சினை தொடர்பாக விவாதிப்பதாகவும் உறுதிமொழி வழங்கினர்.

பேரணி நாடாளுமன்றத்தை சென்றடைவதற்கு முன்னதாக டெனிஸ் காவல்துறையினரால் பலத்த பாதுகாப்புக்கள் போடப்பட்ட நிலையிலும் எமது இளைஞர்கள் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொடும்பாவியையும் சிறிலங்கா தேசியக் கொடியையும் வீதிகளிலும் இந்திய தூதரகம் முன்பாகவும் எரித்து தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.















Read more...

சிறிலங்கா படையினரின் உறவினர்கள் கொழும்பில் முற்றுகை: கடந்த சில நாட்களில் மட்டும் வன்னியில் 800 படையினர் பலி; 700 பேர் காயம்



தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வன்னியில் நடைபெற்று வரும் மோதல்களில் கொல்லப்பட்ட, காயமடைந்த சிறிலங்கா படையினரின் உறவினர்கள் பலர் கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு சென்று தமது பிள்ளைகள், கணவன்மார் குறித்து உடனடியாக தகவல் தருமாறு அழுது புலம்பி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வன்னியில் இதுவரை நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் அதிகமான படையினரின் உடலங்கள் எதுவும் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை எனவும் இதனால் சந்தேகம் கொண்ட மனைவிமாரும் பெற்றோரும் கொழும்பு இராணுவ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு விபரங்களை தருமாறு அழுத்தம் கொடுக்கின்றனர் என்றும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்து அனுராதபுரம், பொலநறுவ மற்றும் கொழும்பு தேசிய மருத்துவமனை, கொழும்பு இராணுவ மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வரும் படையினரை பார்வையிட அனுமதிக்குமாறும் பெற்றோரும் மனைவிமாரும் படைத் தளபதிகளிடம் மன்றாட்டமாக கேட்பதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, முல்லைத்தீவு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற மோதலில் 800-க்கும் அதிமான படையினர் உயிரிழந்தும் 700-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர் என்பதை கொழும்பில் உள்ள உயர் இராணுவ அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வன்னியில் நடைபெற்ற போரில் கொல்லப்பட்ட சாதாரண படையினரின் மாதாந்த சம்பளம் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே உறவினர்கள் கொழும்பு தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டதாகவும் தெரிவித்த அந்த அதிகாரி, கொல்லப்பட்ட உயர் பதவியில் உள்ள படையினரின் சம்பளங்கள் மாத்திரமே அரசாங்கத்தால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Read more...

About This Blog

About This Blog

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP